#902Tamil Spiritual Song
Adaikalamae Umadadimainaanae
அடைக்கலமே உமதடிமை நானே
பல்லவி:
அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே
சரணங்கள்:
1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே - ஆ அடை
2. என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனைக் காட்டுபவரே
நம்பி வந்தோரைக் கிருபை சூழ்ந்து கொள்ளுதே-ஆ அடை
3. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றி விட்டீரே - ஆ அடை
4. பாவங்களைப் பாராதென்னைப் பற்றிக் கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தைத் திரும்ப தந்தீரே
உற்சாக ஆவி என்னைத் தாங்கச் செய்தீரே -ஆ அடை
